Wednesday, November 5, 2008

சிரிக்க வைக்கும் தவறுகள் - நாவல் சுருக்கம்


இரட்டையர் கதைகள் கேள்விப்படிருகிருக்கிறீர்களா? நம்ம ஊர் உத்தமபுத்திரன் தொடங்கி தாய் சொல்லை தட்டாதே ,அவங்க ஊர் ‘யாதோன் கி பராத்' அப்புறம் இப்போ லேட்டஸ்டா ஜீன்ஸ் ,இருவத்துமூணாம் புலிகேசி வரை எல்லா இரட்டையர் கதைக்கும் தாத்தா கதை இந்த 'காமெடி ஆப் எர்ரர்ஸ்' Comedy of Errors (ஷேக்ஸ்பியர்).

எப்பவும் தெளிவா பேசற ஆசாமி கிட்டே இந்த கதையை சொல்லுங்க . கதை கேட்ட அப்புறம் அவர் எப்பிடி பேசறார்னு என்கிட்டே சொல்லுங்க 

எபிசாஸ் , சைரக்யூஸ் ரெண்டு ஊருக்கும் ரொம்ப நாளா தீராத பகை . ரெண்டு ஊருக்கும் மத்திலே மூச்சு -பேச்சு கிடையாது ,ஒட்டு -உறவு கிடையாது ,போக்கு -வரவு கிடையாது ..ஒண்ணுமே கிடையாது .

அதை மீறி எஜியன் எஜியான்னு ஒரு ஆசாமி சைரக்யூசிலே இருந்து எப்பிடியோ எபிசாஸ் உள்ளே போய்டறான் . அங்கே அந்த ஊர் போலீசு அவனை ‘லபக் ’குனு பிடிச்சு உள்ளே போட்டுடறாங்க .ஆயிரம் பொற்காசு குடுக்கலேன்னா அவனுக்கு சங்கு ஊதிடரதுன்னு தீர்ப்பாகுது . பயந்து போன எஜியான் அவன் சொந்த கதை சோக கதையை எப்சிசாஸ் ராஜா சலினாஸ் கையிலே சொல்லி புலம்பறான் .

விஷயம் இததான் .எஜியானுக்கு ரெண்டு பசங்க –ரெட்டை பிறவி - ஒன்னு போலவே இருப்பாங்களே … அந்த ரெட்டை பிறவி .இந்த ரெட்டை பசங்களுக்கு ரெண்டு வேலைக்கார பசங்க .அவங்களும் ரெட்டை பிறவி (ஆனாலும் ஷேக்ஸ்பியருக்கு குறும்பு ஜாஸ்தி). சின்ன வயசுலே இவங்க குடும்பம் பொட்டி படுக்கையெல்லாம் கட்டிக்கிட்டு கப்பலே டூர் போறப்போ கடல்லே கப்பல் கவுந்து எஜியான் ஃபாமிலி ரெண்டு பாதியா பிரிஞ்சு போய்டுது ,அப்பா + ஒரு மகன் தனியாவும் அம்மா +இன்னொரு மகன் தனியாவும் இப்படி ரெண்டா பிரிஞ்சு தனித்தனியா காணாம போய்டறாங்க .
அப்போலேர்ந்து அப்பாவும் புள்ளையும் காணாம போன அம்மாவையும் இன்னொரு புள்ளையையும் ஊர் ஊரா தேடறாங்க .அப்பிடி தேடி எபிசசுக்கு வர இப்படி எக்கச்சக்கமா மாட்டிகிட்டான் எஜியான்

.இந்த செண்டிமெண்ட் கதை ராஜாவை உருக்கி உளுந்தெடுத்திரிச்சு .எஜியான் மேல ரொம்ப பீலிங்க்சான ராஜா அவன் தப்பிச்சுக்க தேவையான ஆயிரம் பொற்காசு கொண்டு வந்து குடுக்க ஒரு நாள் டைம் குடுக்கிறான் .

இது இப்படி இருக்க எஜியான் புள்ளை ஆண்டிபோலசும் அவன் வேலைக்காரன் த்ரோமியோவும் தொலைஞ்சவங்களை தேடிக்கிடே அப்பிடியே எபிசாசுக்கே வந்து சேர்றாங்க .
உண்மையிலே இவங்க தேடற அந்த இன்னொரு புள்ளை எபிசசிலேயே பெரிய ஆளா பிசினஸ்லாம் பண்ணி கொழிசுக்கிட்டு இருக்கான் - அவன் பேறும் ஆண்டிபோலஸ் தான் (ஆனாலும் எஜியானுக்கும் குறும்பு ஜாஸ்திங்க ஹி ஹி ) .

கதை முடியரப்போ நம்ம தலைலே கொஞ்சநஞ்சம் முடி மிச்சம் இருக்கணும் இல்லையா ...அதனால இந்த ரெண்டு பிள்ளயாண்டனையும் ஒருத்தனை ச்ய்ரக்யூசின் ஆண்டிபோலஸ் (எஸ் .ஆண்டிபோலஸ் -அப்பா புள்ளை ) , இன்னொருத்தனை எபிசசின் ஆண்டிபோலஸ் (ஈ .ஆண்டிபோலஸ் -அம்மா புள்ளை )னு சொல்லுவோம் . ஒகேவா .

ஈ .ஆண்டிபோலஸ் பொண்டாட்டி பேர் அட்ரியானா . பஜாரிலே வழிலே எஸ் .ஆண்டிபோலசை பார்க்கிறா அட்ரியானா . பார்த்து அவன் தான் புருஷன்னு தப்பா கணக்கு பண்ணிக்கிட்டு ,அவனை ‘வீட்டுக்கு வந்தா தான் ஆச்சு ’னு வம்பு பண்ணி தர தரன்னு இழுத்துட்டு வந்துருது அந்த பொண்ணு .பத்தாததுக்கு வாசல்லே காவலுக்கு வேலைக்கரனையும் (எஸ் .ட்ரோமயோ ) நிப்பாட்டி வெக்கிறா மகராசி . அப்போ பார்த்து ஈ .ஆண்டிபோலஸ் (அதான் நிஜ புருஷன் ) வீட்டுக்கு வர,,வேலைக்காரன் அவனை உள்ளே விட முடியதுங்க்றான்

இன்னாடா இது நம்ம வீட்லயே நமக்கு இப்படி ஒரு அல்வானு குழம்பறான் ஈ .ஆண்டிபோலஸ்
இந்த அட்ரியானா பொண்ணுக்கு லூசியானா லூசியானா னு ஒரு தங்கச்சி .
அந்த பொண்ணு வேற கிளி மாறி அளாகா இருக்குதா , அந்த வீட்டிலே போயி மாட்டிகிட்ட எஸ் .ஆண்டிபோலஸ் சைக்கிள் கேப்ல நைசா லூசியானா கிட்டே லவ்ஸ் விடறான் .இன்னாடா இது , நம்ம அக்கா புருஷன் நம்ம கைலே ஒரு டைப்பா ராங்கடிக்கராறேன்னு லூசியானா பொண்ணு பேஜாரய்டரா .

இத்துக்கு நடுவுலே ஈ .ஆண்டிபோலஸ் செய்ய சொல்லி ஆர்டர் குடுத்த ஒரு கோல்டு செய்னை நகைகடைகாரவுங்க ஜரூரா எஸ் .ஆண்டிபோலஸ் கையலே கொண்டு குடுத்து அவங்க பங்குக்கு குழப்பறாங்க . குடுத்த கையோடே மறுநாள் ரொம்ப தெளிவா ஈ .ஆண்டிபோலஸ் கிட்டே பில்லோட பாய் நகைக்கடைக்கார பையன் நிக்க , ஈ .ஆண்டிபோலசுக்கு தலையும் புரியல்லே வாலும் புரியல்லே .’நான் தான் இன்னும் நகையே வாங்கலையேனு’ அவன் கேக்க ,’அப்போ நேத்து நகை வாங்காம புகையா வாங்கினே ’னு இவன் சொல்ல ஒரே ரசாபாசமாய்டுது .நகைகடைகாரவுங்க சும்மா உடுவாங்களா ? போலீசுல போய் இன்னா மேட்டேருன்னு விலாவாரியா சொல்லி விட ,ரெண்டு தொப்பி மாமா வந்து ஈ .ஆண்டிபோலஸ் அண்ணாத்தேய உள்ளார போட்டு கம்பி பின்னாலே கணக்கு கத்துக்க உட்டுடுறாங்க

எஸ் .ஆண்டிபோலசை கதற கதற கேக்காம வீட்டுக்கு இழுத்து வந்தாளே அட்ரியானா,அவளுக்கு அவன் பேருலே ஒரே சந்தேகம் .இன்னடா நம்ம புருஷன் கொஞ்ச நாளாவே ஒரு டைபாவே நடக்குராநேனு யோசனையாவே இருக்கு …மண்டைய போட்டு குடாஞ்சாலும் என்ன எது ஒன்னும் பிடிபட மாட்டேங்குது அவளுக்கு ….மொத்தத்திலே அவனுக்கு புத்திதான் கொஞ்சம் கலங்கிடுசுன்னு அட்ரியானா முடிவுக்கு வர்றா … வீட்லே கடேசி கடேசிலே இருக்குமே ஒரு குடௌன் ரூமு , அதுக்குள்ளே நம்ம எஸ் .ஆண்டிபோலசை அடிச்சு பூட்டிடுரா .

இப்படி அட்ரியானா அடிக்கிற லூட்டியிலே மாட்டிகிட்டு நொந்து போன எஸ் .ஆண்டிபோலஸ் எபிசாஸ் ஊருக்கே கிறுக்கு பிடிச்சு போச்சுன்னு முடிவுக்கு வர்றான் .ஒரு நாள் சொல்லாமே கொள்ளாமே நைசா அவன் வேலைக்காரன் எஸ் .த்ரோமியோவையும் இழுத்துகிட்டு அட்ரியானா கையிலே இருந்து எஸ்கேபாயி பக்கத்திலே ஒரு சத்திரம் சாவடியிலே போயி ஒண்டிக்கறான் . சாவடியிலே குந்தினு கீற தன்னோட புருஷனை சேர்த்து வெக்க சொல்லி அட்ரியானா பொண்ணு ராஜா கிட்டே போயி கேட்டுகிறா .

அதுக்குள்ளே போலீசில மாட்டிக்கிட்ட நிஜ புருஷன் ஈ .ஆண்டிபோலஸ் நேக்கா அவங்களுக்கு அல்வா குடுத்துட்டு ராஜா முன்னே வந்து நிக்கறான் .'இந்த அட்ரியானா பொண்ணு பண்ற அநியாயத்தே கேளுங்க ராசா ..சொந்த புருஷனையே வூட்டாண்டை சேர்க்க மாட்டேன்கிறானு' கத்தறான் .

அப்போ சத்திரம் சாவடி முதலாளி எமிலியம்மா எஸ்.ஆண்டிபோலசை ராஜா கிட்டே கூட்டி வர்றாங்க . இன்னாடா இது ஒரே போலே ரெண்டு மன்சனுங்கனு எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம் . நல்லா பார்த்துகோங்க சனங்களேன்னு ரெட்டை பிறவியையும் பக்கம் பக்கமா நிக்க வெச்சு காட்டி எல்லார் குழப்பத்தையும் தீர்த்து வெக்கிறா அந்த புண்ணியவதி ., இந்த எமிலியம்மா யாருன்னு நினைச்சீங்க .அவதான் இந்த ரெட்டையையும் பெத்த அம்மா .

அப்புறம் என்ன ..... ஈ .ஆண்டிபோலஸ் அவன் பொண்டாட்டியோட சேர்ந்துக்கிறான் .எஜியானை ராஜா மன்னிச்சு விட்டுடறார் ரிலீஸ் ஆன கையோட அவனும் ரொம்ப நாள் தொலஞ்சு கெடைச்ச அவன் பொண்டாட்டி கிட்டே போய் சேர்ந்துக்கிறான் .எஸ் .ஆண்டிபோலஸ் பழையபடி லூசியயனாவுக்கு ரூட் போட ஆரம்பிக்கறான் . பிரிஞ்சு சேர்ந்த இன்னொரு ரெட்டை பிறவி - அதாங்க , வேலைக்கார அண்ணன் -தம்பி ஈ .ட்ரோமயோ எஸ் .ட்ரோமயோ - ரெண்டும் ஒண்ணை ஒண்ணு கட்டி பிடிச்சு கண்ணீர் விட்டு ஒரே பீலிங்க்சாறாங்க .
அப்படியே கொசுவர்த்தி சுருள் ஸ்லோமோஷன்ல சுத்துது
க்லோசப்பிலே ரெண்டு வளையல் போட்ட கை ஒண்ணா சேர்ந்து வணக்கம் சொல்லுது
ஸ்க்ரீனை நல்லா இழுத்து மூடி சுபம் போடறாங்க

Sunday, November 2, 2008

இரண்டாம் ரிச்சர்ட்-நாவல் சுருக்கம்




அரச குடும்பங்களில் ஒன்றான லங்கஸடர் குடும்பம் பிரிட்டிஷ் அரியணையை கைப்பற்றிய கதை கூறும் ஷேக்ஸ்பியர் நாடகம் தான் இரண்டாம் ரிச்சர்ட் (Richard II ) . இதன் தொடர்ச்சி நாடகங்கள் என ஹென்றி IV, Parts 1 & 2, மற்றும் ஹென்றி V இவற்றை கூறலாம்
ப்லாண்டஜனட் (plantagenet) குடும்பத்தின் கடைசி வாரிசான ரிச்சர்ட் II இன் வீழ்ச்சியின் பதிவாகவும் அவனை வீழ்த்தி அரியணை ஏறிய லங்கஸடர் குடும்பத்தின் ஹென்றி IV இன் வளர்ச்சியின் பதிவாகவும் இந்த நாடகம் உள்ளது .
இளவயதில் அரியணை ஏறிய இரண்டாம் ரிச்சர்ட் தவறான வழிகாட்டும் நண்பர்களால் மக்களையும் தேசத்தையும் மறக்கிறான் . அயர்லாந்துடன் தேவையற்ற போர் ,இத்தாலிய கலைப்பொருள் சேகரிப்பு என ஊதாரிதனமாய் செலவழிக்கும் ரிச்சர்ட் அதற்காக பொதுமக்கள் கட்டும் வரிகளை பன்மடங்கு கூட்டுகிறான்

காசுக்கு ஆசைப்பட்டு அரச நிலத்தை சில பிரபுக்களிடம் விற்கிறான் ரிச்சர்ட் . ரிச்சர்டின் மாமா ஒருவர் (மக்களின் மரியாதை பெற்றவர் ) இறந்துவிட ,அவரது நிலத்தையும் அவனே கைப்பற்றுகிறான் .

இப்படி அனைத்து தரப்பு மக்களின் வெறுப்பையும் ஒருங்கே சம்பாதிக்கிறான் ரிச்சர்ட் .நிற்க .
இறந்த மாமாவுக்கு ஒரே பிள்ளை – ஹென்றி பலிங்க்ப்ரக் (henry balinbroke). நற்குணங்களினால் வெகுஜனங்களின் பிரியத்துக்கு பாத்திரமானவன் ஹென்றி . ஒரு அரசியல் கொலை எழுப்பிய தீராத சர்ச்சையை காரணம் காட்டி ஹென்றியை ஆறு ஆண்டுகள் நாடு கடத்தி விடுகிறான் ரிச்சர்ட் .இது ஹென்றியின் தந்தை மரணத்துக்கு முன்னரே நடந்து விடுகிறது .

தனக்கு சேர வேண்டிய சொத்தை ரிச்சர்ட் அபகரித்துவிட்ட செய்தியை கேட்ட ஹென்றி கொதித்தேழுகிறான் .இந்த நேரத்தில் ரிச்சர்ட் அயர்லாந்துக்கு போர் செய்ய புறப்பட ,ஹென்றி ஒரு படையை திரட்டி வந்து இங்கிலாந்தை தாக்குகிறான் .

ஹென்றி பலிங்க்ப்ரக் மேல் பிரியம் கொண்ட பொதுமக்கள் திரண்டு வந்த படையை வரவேற்று அதனுடன் தாங்களும் இணைகிறார்கள் . ஹென்றியின் படை லண்டனை நோக்கி முன்னேறுகையில் பிரபுக்கள் ஒவ்வொருவராய் ரிச்சர்ட் பக்கமிருந்து ஹென்றி பக்கம் தாவிவிட , போர் புரியாமலேயே வெற்றி பெரும் பலிங்க்ப்ரக், நான்காவது ஹென்றியாக இங்கிலாந்தின் அரியணை ஏறுகிறான் . ரிச்சர்டை கைது செய்து வடக்கு இங்கிலாந்தின் பமஃப்ரெட் கோட்டையில் ஹென்றி சிறைஎடுக்கிறான் . அங்கு ஒரு கொலைகாரன் ரிச்சர்டை கொன்று விட , கொலைக்கு பொறுப்பேற்க மறுக்கும் ஹென்றி , பாவத்தை களைய ஜெருசலேம் பயணம் மேற்கொள்வதுடன் நாடகம் முடிகிறது

Saturday, November 1, 2008

ஜாவா மொழி கற்க ஒரு எளிய வழி

ஜாவா மொழி கற்க ஒரு எளிய வழி -

கரேல் எனும் இயந்திர மனிதனை கட்டுப்படுத்துவதன் மூலம் மொழியின் வடிவத்தை எளிமையாக கற்க முடிகிறது .முயன்று பாருங்களேன்.

http://www.cs.mtsu.edu/~untch/karel/book.html
http://cs106a.stanford.edu/materials/karel-the-robot-learns-java.pdf

Friday, October 31, 2008

Friday, October 24, 2008

மன்னனின் மக்கள்-நாவல் சுருக்கம்



1930 களில் வாழ்ந்த ஒரு அமெரிக்க அரசியல் புள்ளியின் வாழ்வையும் தாழ்வையும் சித்தரிக்கும் கதை All the King's Men .Robert pen warren எழுதியது -1947 புலிட்சர் விருது பெற்ற நாவல் .

கதையின் ஒரு நாயகன் வில்லி ஸ்டார்க் (willie stark) . அன்றாடம் காய்ச்சியாய் வாழ்க்கையை தொடங்கும் ஸ்டார்க் மெல்ல உயர்ந்து தனது மாநிலத்தின் ஆளுநர் ஆகின்றான் .பெரும் அதிகார மய்யமாக மாறும் ஸ்டார்க் உருட்டல் மிரட்டல்கள் மூலமே எதிரிகளை அடக்குகிறான் . ஏழை விவசயிகளின் சுமையை குறைக்க வேண்டி செல்வந்தர்களுக்கு பல் வேறு வரிகளை விதிக்கிறான் .
அவனுக்கு பல எதிரிகள் இருந்தாலும் ,தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஆளுநர் சாம் மகமர்பி ஸடார்க்கின் அதிகாரத்தை குறைக்க எப்போதும் திட்டமிடுகிறான் . மேல்தட்டு ஆளும் வர்க்கத்தை சேர்ந்த ஜாக் பார்தேன் (Jack barden) தான் ஸடார்க்கின் வலது கரம் –கதையின் மற்றொரு நாயகன் ஜாக் .

ஜாக் தனது வரலாற்று ஞானத்தை வைத்து ஸடார்க்கின் எதிரிகளின் ஜாதகத்தையே தயாரித்துத்தர , இதை வைத்து மிரட்டும் ஸ்டார்க் ,எதிரிகளை சுலபமாய் வீழ்த்துகிறான் .நம்பிக்கையற்ற மனபோக்குள்ளவனாய் சித்தரிக்கப்படும் ஜாக் பல விஷயங்களை பாதியிலேயே நிறுத்துகிறான் ,அமெரிக்கா வரலாறு பற்றிய அவனது ஆய்வை அவன் முடிக்கவில்லை ;ஆன் ஸ்டாண்டன் எனும் அவனது முதல் காதலியை மனம் புரிவதில்லை .

ஜாக் தனது குழந்தை பருவம் முதல் தன் வாழ்வில் முன்மாதிரியாக நினைத்திருந்த மனிதரான நீதிபதி இர்வினின் அறையில் சில எலும்புகளை தேட ஸ்டார்க் பணிக்கிறான் .இதனால் ஜாக் மிகுந்த மனகுழப்பதுக்கு உள்ளாகிறான் .முடிவில் நீதிபதி இர்வின் லஞ்சம் பெற்றதும் அதனை அன்றைய ஆளுநர் ஆடம் ஸ்டாண்டன் (ஜாக்கின் காதலியின் தந்தை ) மறைத்ததும் தெரிய வருகிறது …விஷயம் வெளியே வர நீதிபதி தற்கொலை செய்து கொள்கிறார் . இதை வைத்து ஸ்டார்க் விடுத்த மிரட்டலுக்கு பணிந்து ஆடம் ஸ்டாண்டன் ஸடார்க்கின் மருத்துவமனையில் இயக்குனராக சேர்கிறான் .இதன் விளைவாய் ஸ்டாண்டன் மகள் ஆன் ஸ்டான்டனுக்கும் ஸ்டார்கிற்கும் இடையே தொடர்பு ஏற்படுகிறது . கொதித்தெழுந்த ஆடம் ஸ்டாண்டன் சடார்கை கொலை செய்கிறான் . ஜாக் அரசியலை துறக்கிறான் .

ஸடார்க்கின் மரணமும் அது நடந்த சூழ்நிலையும் ஜாக்கை யோசிக்க வைக்கிறது .ஆன் ஸ்டான்டனை மணம் புரிகிறான் .தனது விட்டு போன அமெரிக்கா வரலாற்று ஆய்வை மீண்டும் தொடர்கிறான் ஜாக்

மணப்பெண் இளவரசி-நாவல் சுருக்கம்



மணப்பெண் இளவரசி (Princess bride) 1973 இல் எழுதப்பட்ட ஒரு விறுவிறுப்பான விந்தை கதை (Fairy tale).
முதலில் கதாசிரியர் வில்லியம் கொல்ட்வெல் தன்னையும் , தன் குடும்பத்தையும் அறிமுகம்
செய்கிறார் . பின்னர் தான் சிறு பிராயத்தில் வாசித்த ,மிகவும் பிடித்த ஒரு புத்தகம் பற்றி பேசுகிறார் .இதன் ஆசிரியர் எஸ் .மார்கன்டேன் .

நிமோனியா ஜுரத்தால் கோல்ட்வெல் நோயுற்று படுக்கையில் கிடந்த நாட்களில் இந்த புத்தகத்திலிருந்து தன் தந்தையார் தனக்கு வாசித்து காட்டிய சாகச கதைகளில் சுவாரஸ்யமான பகுதிகளை இந்த புத்தகத்தில் தொகுத்திருப்பதாக கூறுகிறார்.

உலகின் இருபது சிறந்த அழகிகளில் ஒருத்தியான பட்டர்கப்பின் (buttercup) வாழ்க்கை வர்ணனையுடன் கதை துவங்குகிறது . பெற்றோருடன் பண்ணை ஒன்றில் வாழும் பட்டர்கபுக்கு வெஸ்லி எனும் பண்ணையாள் மேல் காதல் மலர்கிறது

தனது காதலை வெஸ்லியிடம் தெரிவிக்கிறாள் பட்டர்கப் .வெஸ்லி செல்வம் தேடி அமெரிக்கா செல்கிறான் . சிறிது காலம் தொட்டு வெஸ்லி ராபெர்த்ஸ் எனும் கடல் கொள்ளையனால் கொல்லப்பட்டதாக தகவல் வருகிறது . மனமுடைந்த பட்டர்கப் தனது வாழ்வில் இனி காதலே இல்லை என முடிவெடுக்கிறாள் .

கதை இப்பொது ஃப்லரின் தேசத்துக்கு தாவுகிறது . ஃப்லரின் (flarin) இளவரசன் ஹம்பர்டின்கின் (hamperdink) திருமண ஏற்பாடுகள் விவரிக்கபடுகிறது . ஹம்பர்டின்க் ஒரு வேட்டை பிரியன் - அபாயகரமான விலங்கு வேட்டையாடி ஃப்லரின் தேசத்து வனங்களிலே பெரும்பகுதி நேரத்தை கழிப்பவன் ஹம்பர்டின்க் . அரசன் லோதரனை வயோதிகம் வருத்த ,ஹம்பர்டின்க் அரசபாரத்தை சுமக்க வேண்டிய கட்டாயம் வருகிறது .ஃப்லரின் அரச பதவிக்கு திருமணமானவர் மட்டுமே தகுதியுடையவர் என்பதால் , ஹம்பர்டின்க்கு பெண் தேட துவங்குகிறார்கள்.


கில்டேர் தேச இளவரசியை பெண் பார்க்கும் படலம் அசந்தர்ப்பத்தில் முடிய ..ரூஜென் பிரபுவின் மூலம் பட்டர்கப்பை சந்திக்கிறான் ஹம்பர்டின்க் .ஹம்பர்டின்க் பட்டர்கபை மணம் புரிய சம்மதம் கேட்கிறான் . இதற்கிடையே ஒரு கடத்தல் கும்பல் பட்டர்கப்பை கடத்துகிறது . அவர்கள் கடல்வழியே கில்டேர் தேசத்தின் கரையோர குன்றுகளுக்கு பட்டர்கப்பை கொண்டு செல்ல , ஒரு கரும்படகு அவர்களை நிழலென தொடர்கிறது .

கில்டேர் கடற்கரையில் நடக்கும் சண்டையில் (வாள் சண்டை , குத்து சண்டை எல்லா வகையும் உண்டு ) கரும்படகில் வந்த கருப்பு அங்கி மனிதன் கடத்தல் கும்பலை சிதறடித்து சாய்க்கிறான் .கும்பலில் இருவர் - இனிகோ , ஃபெஸிக் - மட்டும் தப்புகின்றனர் . கில்டேர் கரையில் பட்டர்கப்புடன் தப்பிக்கும் அந்த மர்ம மனிதன் நெடுநாளாய் கண்மறைந்திருந்த வெஸ்லி என தெரியவருகிறது .

இணைந்த காதலர் ஹமபர்டின்க் கையில் சிக்காதிருக்க வேண்டி பயர்ஸ்வம்ப் (தீக்குழி ) எனும் அபாயம் நிறைந்த வழியில் பயணிக்கிறார்கள் .வெஸ்லி எந்த கடல்கொள்ளயனால் கொல்லப்பட்டதாக கூறபடுகிறதோ , உண்மையில் வெஸ்லி தான் அந்த கடல்கொள்ளயன் என தெரியவருகிறது .

காதலர் இருவரும் பாயர்ஸ்வம்பை தாண்டியதும் அவர்களை ஹம்பர்டின்க் எதிர்கொள்கிறான் .வெஸ்லியை பாதுகாப்பாக அவனது கப்பலில் சேர்ப்பித்தால் ஹம்பர்டின்குடன் வர பட்டர்கப் சம்மதிக்கிறாள் . இணைந்த காதலர் மீண்டும் பிரிகின்றனர் .

ஹம்பர்டின்க் -பட்டர்கப் திருமண நாள் நெருங்குகிறது .
ஹம்பர்டிங்கும் ரூஜென் பிரபுவும் வெஸ்லியை சிறையில் சித்ரவதை சாலைக்குள் அடைத்து துன்புறுத்துகிறார்கள் . பட்டர்கப்போ தனிமையில் வெஸ்லியை நினைத்து ஏங்குகிறாள் .கில்டேர் கரையில் தப்பிய கடத்தல் கும்பலின் இனிகோவும் ஃபெஸிகும் வெஸ்லியை தேடி தீர்க்க திட்டமிடுகிறார்கள் .வெஸ்லி சிறையில் பட்டர்கப்பை நினைத்து வாடுகிறான் .

ஹம்பர்டின்க் பட்டர்கப்பை கொல்ல திட்டமிடுகிறான் . திருமண இரவிலேயே பட்டர்கப்பை கொன்று , கொலை பழியை கில்டேர் தேசத்தின் மீது சுமத்தி அதன் மேல் போர் தொடுப்பது தான் திட்டம் .

பட்டர்கப் வெஸ்லியை பற்றி ஹம்பர்டின்கிடம் விசாரிக்க ஹம்பர்டின்க் உண்மையை மறைக்கிறான் .தனது கடற்படை கப்பல்கள் நான்கினை செலுத்தி வெஸ்லியை தேடி வருவதாக கூறுகிறான் .பட்டர்கப் இத்தனை நம்ப மறுக்கிறாள் . பட்டர்கப்பின் இழிசொல் கேட்டு கொதித்தெழுந்த ஹம்பர்டின்க் சிறையில் உள்ள வெஸ்லியை கொல்ல ஆணையிடுகிறான் …சித்ரவதை இயந்திரந்தில் அகப்பட்டு வெஸ்லி கூக்குரலிடும் ஓசை கேட்டு இனிகோவும் ஃபெஸிகும் சித்ரவதைசாலையை நெருங்குகிறார்கள் . நெளியும் பாம்புகள் ராட்சச வவ்வால்கள் என அதி பயங்கர பிராணிகளின் காவலை மீறி உள்ளே செல்லும் இருவரும் அங்கே வெஸ்லியின் சடலத்தை காண்கிறார்கள் .

வெஸ்லியின் சடலத்தை மிரகிள் மேக்ஸ் (miracle mex) எனும் மந்திரவாதியிடம் எடுத்து செல்கின்றனர் .முதலில் தயங்கினாலும் முடிவில் மந்திரவாதி ஒரு அதிசய மருந்தை தயார் செய்து தருகிறான் .
இனிகொவும் ஃபெஸிகும் கோட்டை சுவர் உச்சிக்கு வெஸ்லியின் சடலத்தை கொண்டு சென்று அங்கிருந்தபடி மருந்தை புகட்ட , வெஸ்லி மீண்டும் உயிர் பெறுகிறான் .
உயிர் பெற்ற வெஸ்லி உடனே அவர்களுடன் சேர்ந்து கோட்டைக்குள் நுழைய திட்டமிடுகிறான் .ஃபெஸிக் தான் மேல் தீ பிழம்புகளுடன் சக்கரங்கள் கட்டியவாறே கோட்டைக்குள் நுழைய ,இனிகோ ரூஜெனை சண்டையிட்டு கொல்கிறான் .ஹும்பர்டிங்கை மணம் செய்த சோகத்தில் தற்கொலை செய்ய முடிவெடுக்கும் பட்டர்கப் வெஸ்லியை கண்டதும் மலர்கிறாள் .வெஸ்லியின் மிரட்டலில் பயந்து போன ஹம்பர்டிங்கை பட்டர்கப் ஒரு நாற்காலியில் சேர்த்து கட்டுகிறாள் . அப்போது நான்கு வெண்புரவிகளோடு ஃபெஸிக் தோன்ற அவனுடன் இனிகோ வெஸ்லி மற்றும் பட்டர்கப் நால்வரும் கோட்டையிலிருந்து தப்புகின்றனர் …பின் எப்போதும் அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் .
.

Thursday, October 23, 2008

வுதரிங் ஹைட்ஸ்-நாவல் சுருக்கம்




வடக்கு இங்கிலாந்தின் மூர் பிரதேச பின்னணியில் நாவலாசிரியை
எமிலி பிரண்ட் (Emily bronte) நெய்த ஒரு காதல் கதை தான் 'வுதரிங் ஹைட்ஸ்' (Wuthering heights)... ..ட்ராஜெடி வகை நாவல் இது ...ஹித்க்லிஃப் –கேதரின் (heathcliff- Catherine) ஜோடியின் நிறைவேறாத காதல் கதை..இந்த நிறைவேறாத காதல் ஒரு குடும்பத்தையே சின்னா பின்னப்படுத்தியதை கூறும் கதை ......

பெருமபகுதி நெல்லி டீன் (கேதரினின் முன்னாள் பணிப்பெண்) வாயிலாக லாக்வுட்டிடம் (நாயகன் ஹித்க்ளிபின் இல்லத்தில் குடியிருப்பவர் ) கூறப்படுகிறது .

இரு இணை பிரியா இதயங்களை நம்முன் நடமாட விட்டு காதல் உணர்வின் ஆழத்தை அழகாய் கண் முன் கொண்டுதருவார் எமிலி பிரண்ட் .

'உதரிங் ஹைட்ஸ்' - இதுதான் நமது நாயகி பிறந்து வளர்ந்த வீட்டின் பெயர் ....என்ஷா குடும்பத்தின் பூர்விக வீடு அது ...நாவலின் பெயரும் இதுதான் ...

என்ஷா வீட்டில் இரு குழந்தைகள் -கேதரினும் அவள் அண்ணன் ஹினட்லியும் .
ஒரு முறை அவளது தந்தை லிவர்பூல் நகர் சென்று திரும்பும்போது ஒரு அனாதை சிறுவனை உடன் அழைத்து வருகிறார் .வீட்டில் உள்ள இரு குழந்தைகளுடன் அனாதை ஹித்க்லிஃப் வளருகிறான்..பெரியவன் ஹினட்லி ஹித்க்லிஃபை வெறுக்கிறான்....இளையவள் கேதரினோ காலப்போக்கில்ஹித்க்ளிபிடம் காதல் கொள்கிறாள்.....ஒரு நேரத்தில் ஹினட்லி தரும் தொல்லைகள் அளவுக்கு அதிகமாக ...அவனது தந்தை அவனை வீட்டிலிருந்து வெளியேற்றுகிறார். இதனால் ஹித்க்லிஃப் மீதான ஹினட்லியின் வெறுப்பு பன்மடங்கு அதிகமாகிறது ...தந்தையின் மரணம் ஹினட்லியை மறுபடி 'உதரிங் ஹைட்ஸ்' இல்லத்துள் கொணர்ந்து சேர்க்கிறது ..
ஹினட்லியின் வெறுப்பும் அசூயையும் சேர்ந்து அவனை வேண்டாத விருந்தாளியாக்கினாலும் , கேதரின் பால் கொண்ட தூய காதலால் கட்டுண்ட ஹித்க்லிஃப் உதரிங் ஹைட்சிலேயே தொடர்ந்து வசிக்கிறான்..ஆனால் பக்கத்து ஊருக்கு சென்ற கேதரினோ அங்கே அவள் தங்கிய வீட்டின் கோமானாகிய எட்கர் லிண்டன் எனும் அழகிய வாலிபனால் ஈர்க்கபடுகிறாள்.வருத்தம் தாளாது மனத்துயருடன் ஹித்க்லிஃப் உதரிங் ஹைட்ஸை விட்டு வெளியேறுகிறான்.வெளியேறும்போது மீண்டும் ஒருநாள் நிச்சயம் திரும்புவதாக சபதம் மேற்கொள்கிறான்.கேதரின் எட்கர் திருமணம் நடை பெறுகிறது.

மூன்று வருடங்கள் கழிகின்றன ... ஹித்க்லிஃபை பற்றி எந்த தகவலுமில்லை..திடீரென ஒரு நாள் ஹித்க்லிஃப் பெரும் செல்வந்தனாக அந்த ஊருக்கு திரும்ப வருகிறான்.ஹினட்லியை குடிக்கவும் சூதாடவும் செய்து அவனை கடனில் மூழ்கடிக்கிறான்.ஹ்ன்ட்லியின் மரணம் ஹித்க்லிஃபை உதரிங் ஹைட்ஸின் உரிமையாளனாக்குகிறது. ஹித்க்லிஃப் கேதரினை சந்திக்கிறான் .கேதரின் ஹித்க்லிஃப் மேல் கொண்ட காதல் எட்கரை கொதித்தெழசசெய்கிறது ...காதலனுக்கும் கணவனுக்கும் இடையே கலங்கி தவிக்கிறாள் கேதரின் ...ஒரு பெண் குழந்தை பிறக்க பிரசவத்தின் போதே கேதரின் மரணம் அடைகிறாள்.இந்த மரணத்தால் மனம் இறுகிப்போன ஹித்க்லிஃப் மிருகமாய் மாறுகிறான் ... எட்கரை பழி வாங்க எண்ணி அவன் தங்கை இசபெல்லாவை திருமணம் செய்து மிகவும் மோசமாக சித்ரவதை செய்ய...இசபெல்லா இறக்கிறாள்.இது போதாதென தன்னிடம் வளரும் ஹினட்லியின்
மகன் ஹெர்டனையும் தனது சொந்த மகன் (இசபெல்லாவின் மகன்) லிண்டனையும் கொடுமைபடுத்துகிறான். கேதரின் மகள் கேதி அந்த வீட்டில் பணிப்பெண்ணாக இருக்கிறாள்.அவளுக்கும் ஹெர்டனுக்கும் காதல் மலர்கிறது.நிறைவேறாத காதலால் மனம் தவித்து அலையும் ஹித்க்லிஃப், கேத்தரினின் ஆவி தன்னுடன் பேசுவதாக நம்புகிறான் .மூர் பள்ளத்தாக்குகளில் கேத்தரினின் ஆவியை தேடி அலையும் ஹித்க்லிஃப் அங்கேயே மரணம் அடைகிறான்..கேத்தியும் ஹெர்டனும் மணம் புரிந்த பின் 'உதரிங் ஹைட்ஸ்' வீட்டை விட்டு த்ரஷ்கொர்ட் கிராஞ்சு வீட்டுக்கு குடிபெயர்வதுடன் கதை முடிகிறது.-
இப்போதும் வடக்கு இங்கிலாந்தின் மூர் பள்ளத்தாக்குகளில் ஹித்க்லிஃப் -கேதரின் ஜோடிஆவியாக வலம் வருவதாய் ஐதீகம்...