Saturday, October 18, 2008

சதுரங்கம்

தமிழ்நாடு கொஞ்சம் சூடான ஊர் னு சொன்னா திருச்சி அதிலே இன்னும் கொஞ்சம் சூடான இடம்னு தைர்யமா சொல்லலாம் .
இப்போ நான் திருச்சி வாசி .)
ராத்திரி சாப்பாட்டுக்கு அப்புறம் எல்லா திருச்சி வாசிகளையும் போல நானும் மொட்டை மாடியிலே ஒரு அரை மணி நேரமாவது காத்து வாங்கிற பேருலே

a)மேகத்தை கண்ணாலேயே துரத்துறது ,

b)நிலாவுக்குள்ளே சிம்ரன் மூஞ்சி தெரியுதான்னு தேடுறது ,

c)ஸ்டார் எல்லாம் அது அது இடத்துலே சரியா உக்காந்துகிட்டு இருக்கான்னு எண்ணுறது ,

d)பக்கத்து/எதிர் வீட்டு மொட்டை மாடியிலே யார் இருக்கான்னு பார்க்கவே பார்க்காமே இருக்கிறது :-)

இப்படி ஒரு லிஸ்ட்வெச்சிருப்பேன் .

நேரம் போக போக நிக்க விடாத அளவு நம்ம தேசிய பூச்சி (அதாங்க கொசு ) என்னை ஆக்ரமிச்சுடும் . அப்போ எல்லாத்துக்கும் குட் நைட் (நாலாவது வேலை தவிர ..அது நான் செய்யாதது ..ஆமாம் )சொல்லிட்டு நல்லபிள்ளையா கீழே இறங்கி ஜோஜோ தூங்கிடுவேன் .

இந்த மாதிரி ஏதோ ஒரு நாள் , யாரோ என்கிட்டே பேசின மாதிரி ஒரு பிரமை இருந்திருக்குன்னு நினைக்கிறேன் …

உரை நடை +கவிதை கலந்து தான் இருக்கும் …தூய தமிழ் கவிஞர்கள் இந்த தடவை மன்னிச்சு விட்டுடுங்க ...:-)


சதுரங்கம்

கதிர் சாய்ந்த மாலை வேளை …

உணவுக்குப்பின் ஓய்வாக
மொட்டை மாடி தரையில்
சற்றே மல்லாந்த நேரம் ….
மேலே பார்த்தால் தெரிந்த முகம் ….

…வான் மகள் ….

மெலிதாய் ஒரு நகை …
குறும்பாய் ஒரு கண் சிமிட்டல் ….

ஏதோ விளையாட அழைக்கிறாள்
என புரிந்தது ….
என்ன விளையாட்டு ?

யோசிக்கும் முன்
எதிரே துள்ளி விழுந்தது
ஒரு கட்டமிட்ட பலகை

ஒ ……இன்று சதுரங்கம் !!

அவசரமாய் காய்களை தேடினேன்
ஞாபக பைய்யுள்
தேடி துழாவியதில்
எண்ண விரல்களில்
முதலில் சிக்கியது … புன்னகை :-)

புன்னகையுடன் புன்னைகையை
பலகை மேல் நான் வைக்க ….
பதிலுக்கு எதிர்புறம்
அழகாய் சிரித்து
எழுந்தது வைகறை …

சற்றே சஞ்சலத்துடன்
நான் காய் நகர்த்த …
பதிலுக்கு ஒரு கருமுகில் கூட்டம்
வேகமாய் நகர்ந்து
என் பக்கம் வந்தது…

கோபத்தை கோபமாய்
பலகை மேல் நான் நகர்த்த ….
எதிரே ஒரு மூலையில்
பலமாய் இடி முழக்கம் ….

சுட்டு விழி பார்வையையே
அடுத்த காயாய் நான் எடுக்க ….
கீழ்வானை கீறியது
கண் கூசும் மின்னல் ஒன்று

கண்ணீர் எடுத்து நான்
பலகை மேல் வைக்கும் முன்னே …
எதிர்புறம் சோவென
பெய்தது அடை மழை …

என்னவளின் ஊடலை
காயாக நான் வைக்க ….
பதிலுக்கு பலகை மேல்
பிழம்பாய் செங்கதிர் ….

ஆசையாய் காதலுடன்
அடுத்த காயை நான் நகர்த்த ….
வட்டமிட்டு குளிர் பொழிந்தது
நீல வானின் வெள்ளை நிலா ….

வண்ண வண்ண கனவுகளை
அள்ளி நான் எடுத்து வைக்க ….
எதிரே வான் முழுதும்
பொட்டுக்களாய் விண்மீன் கூட்டம் ….

எண்ணத்தை வரிகளில் கோர்த்து
அழகிய கவிதை புனைந்து
பாங்காய் பலகை மேல் வைக்க …..
எதிரே முகில் கூட்டம் விலக்கி
எழுந்தது எழு வண்ண வானவில் ….

அடுத்த காயை தேடி தோல்வியுற்று
தளர்வாய் எழுந்தேன்
பலகை முன்னிருந்து …
‘விட்டுவிடு என்னை …உனை ஜெயிக்க
என்னால் ஆகாது’….

மறுபடி மெலிதாய் ஒரு நகை …
குறும்பு கண் சிமிட்டல் வேறு ….
‘ஏதேனும் இருக்கும் …
இறுதி முயற்சி தான் செய்து பாரேன் ….’

ஏதேனும் காய்கள் தாம் எஞ்சி உள்ளவோ ?
மறுபடி ஞாபக துழாவல் …

அகப்பட்டது ஒரு காய் !
தப்பிக்க இயலாது போல…

மறைந்திருந்த காய் தான் ஏதோ ?
தெரிந்து கொள்ளும் ஆவலில்
அதனை நான் வெளியெடுக்க ….

பார்வை பிடிபடு முன்னரே
வேகமாய் கவிந்து
கண்ணை மறைத்தது
காரிருள்

ஒ …துயில் ….:-)

——–

No comments: